ஜார்கண்ட் மாநிலம் சைபாசாவில் நிகழ்ந்த மருத்துவ அலட்சியம் சமூகத்தையே அதிர்ச்சியடையச் செய்துள்ளது. தலாசீமியா நோயால் பாதிக்கப்பட்ட ஐந்து குழந்தைகள் பரிசுத்தமற்ற ரத்த பரிமாற்றத்தால் HIV தொற்றுக்கு ஆளாகியுள்ளன என்பது பெரும் சோகமான செய்தியாகும்.
மாவட்ட மருத்துவமனையில் 7 வயதுடைய சிறுவனுக்கு தொடர்ந்து ரத்தம் பரிமாற்றம் செய்யப்பட்ட நிலையில், அவருக்கு HIV தொற்று ஏற்பட்டதாகக் குடும்பம் புகார் அளித்தது. இதனைத் தொடர்ந்து நடந்த விசாரணையில் மேலும் நால்வருக்கு இதே நோய் தொற்றியிருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்த நிகழ்வு, மருத்துவப் பிரிவில் பாதுகாப்பற்ற நடைமுறைகளும் கண்காணிப்பு குறைபாடுகளும் இன்னும் நீங்காதிருப்பதை வெளிப்படுத்துகிறது.
இந்தச் சம்பவத்துக்குப் பிறகு அரசு உடனடி நடவடிக்கை எடுத்துள்ளது. சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் மற்றும் அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மாநில முதல்வர் ஹேமந்த் சோரன், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.2 லட்சம் நிதி உதவி மற்றும் முழு சிகிச்சை செலவினங்களையும் அரசு ஏற்கும் என அறிவித்துள்ளார். மேலும் மாநிலம் முழுவதும் உள்ள ரத்த வங்கிகளில் சிறப்பு ஆய்வும் கட்டுப்பாடும் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
இத்தகைய சம்பவங்கள், ரத்த பரிமாற்றத்தில் கடுமையான பாதுகாப்பு விதிகள் பின்பற்றப்பட வேண்டியது அவசியம் என்பதையும், மருத்துவ முறைமைக்கு மீதான மக்கள் நம்பிக்கையை நிலைநிறுத்த துரிதமான சீர்திருத்தங்கள் தேவை என்பதையும் மீண்டும் வலியுறுத்துகின்றன.
