ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டி20யில் சதம் அடித்த முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றார்..

2023 ஒருநாள் உலக கோப்பை தோல்விக்கு பின் சூர்யகுமார் யாதவ் தலைமையில் இளம் இந்திய அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் முதல் 2 டி20 போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று 2-0 என முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில் கவுகாத்தியில் 7 மணிக்கு நடைபெறும் 3வது டி20 போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் மேத்யூ வேட் முதலில் பந்து வீசுவதாக அறிவித்துள்ளார். அதன்படி ஜெய்ஸ்வால் மற்றும் ருதுராஜ் இருவரும் இன்னிங்சை தொடங்கினர். ஜெய்ஸ்வால் பவுண்டரியுடன் தொடங்கினாலும் 2வது ஓவரில் 6 ரன்களில் அவுட் ஆனார். இதையடுத்து வந்த இசான் கிஷன் டக் அவுட் ஆனார். அதன்பின் ஜெய்ஸ்வால் மற்றும் சூர்யகுமார் யாதவ் இருவரும் சேர்ந்து சிறப்பாக ஆடினர். சூர்யகுமார் யாதவ் சிக்ஸர்களாக பறக்கவிட்டுக் கொண்டிருந்தார்.

ருதுராஜ் தேவையான பந்துகளை மட்டும் பவுண்டரிக்கு விரட்டினார். பின் 11 வது ஓவரில் சூர்யகுமார் யாதவ் 29 பந்துகளில் 39 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். இதையடுத்து திலக் வர்மா மற்றும் ருதுராஜ் கைகோர்த்தனர். ருதுராஜ் அரைசதம் அடித்தார். அதன்பின் கியரை மாற்றிய ருது  அதிரடியாக பவுண்டரி, சிக்ஸர்கள் என விளாசினார். குறிப்பாக ஆரோன் ஹாரிடி வீசிய 18வது ஓரில் ருதுராஜ் 3 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி என 24 ரன்களை விளாசினார்.

பின் மேக்ஸ்வெல் வீசிய கடைசி 20-வது ஓவரில் முதல் பந்தில் சிக்சர் அடித்து 52 பந்துகளில் தனது முதல் டி20 சதம் விளாசினார்.  அதோடு நிக்காமல் அந்த ஓவரில் மேலும் 2 சிக்சர் ஒரு பவுண்டரி என விளாசினார் ருதுராஜ். இதில் 2வந்து பந்து நோபால் பவுண்டரி வந்தது. மொத்தம் மேக்ஸ்வெல் வீசிய கடைசி ஓவரில் மட்டும் 30 ரன்கள் கிடைத்தது.

இறுதியில் இந்திய அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 222 ரன்கள் குவித்தது. ருதுராஜ் 57 பந்துகளில் 13 பவுண்டரி 7 சிக்ஸர் உட்பட 123 ரன்களுடனும், திலக் வர்மா 24 பந்துகளில் 31 ரன்களுடனும் அவுட் ஆகாமல் இருந்தனர்.
இதில் குறிப்பிட வேண்டுமென்றால் கடைசி 36 பந்துகளில் ருதுராஜ் 102 ரன்களை விளாசி உள்ளார். அது மட்டுமல்லாமல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டி20-ல் சதம் அடித்த முதல் இந்தியர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார் கெய்க்வாட். டி20 போட்டியில் சதம் அடித்த பத்தாவது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார் ருத்ராஜ். இதற்கு முன் ரோகித் சர்மா (4) சூரியகுமார் யாதவ் (3) கே.எல் ராகுல் (2)  மற்றும் சுப்மன் கில் (1) சுரேஷ் ரெய்னா, ஹர்மன் பிரீத் கவுர், தீபக் ஹூடா, விராட் கோலி, ஜெய்ஸ்வால், ஆகியோர் ஒரு சதமடித்துள்ளனர். தற்போது ஆஸ்திரேலிய அணி களமிறங்கி ஆடி வருகிறது.