சாலையில் குடித்துவிட்டு புகைப்பிடித்தல் மற்றும் சத்தமாக இசை போட்டுவிட்டு நடந்து சென்ற தம்பதியினருக்கும், காலை நடை பயிற்சி சென்றவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

தெலங்காணா, ரங்காரெட்டி மாவட்டம், ராஜகொண்டா நெடுஞ்சாலையில் குடித்துவிட்டு புகைப்பிடித்துக் கொண்டிருந்த தம்பதியை பார்த்து காலை நடை பயிற்சிக்கு வந்தவர்கள் கண்டித்தனர். பொது இடத்தில் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது சரியாக இருக்காது என்று வாதிட்டனர். ஆனால், தாங்கள் யாருக்கும் இடையூறு செய்யவில்லை என்றும், தவறாக எதையும் செய்யவில்லை என்றும் அந்த தம்பதி வாதிட்டனர். வீடியோவில் தம்பதியிடம் சாலையில் குடிப்பதை நிறுத்துமாறு காலை நடை பயிற்சிக்கு சென்றவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

தங்களை வீடியோ எடுப்பதை நிறுத்துமாறு அந்த பெண்மணி கூறுகிறார். தங்கள் வேலையை பார்த்துக் கொள்ளுங்கள், யாருக்கும் இடையூறு செய்யவில்லை என வாதிடுகிறார். வாக்குவாதம் தீவிரமடைந்த நிலையில், தம்பதியும் தங்கள் போனில் சம்பவத்தை பதிவு செய்கின்றனர். “நாங்கள் உங்களுக்கு இடையூறு செய்தோமா? உங்களுக்கு ஏதாவது பிரச்சினை செய்தோமா?” என்று அந்த பெண்மணி கேள்வி எழுப்பி வாதிடுகிறார். அவரது கணவர் சண்டையை நிறுத்தும் முயற்சியில் தனது மனைவியை அங்கிருந்து அழைத்துச் செல்ல முயற்சிக்கிறார். ஆனால் அவர் தொடர்ந்து வாதிடவே செய்கிறார். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.