தூத்துக்குடியில் இருந்து சுண்ணாம்பு பாரம் ஏற்றி சென்ற லாரி நேற்று முன்தினம் மதுரை விமான நிலையம் அருகே இருக்கும் சின்ன உடைப்பு சந்திப்பு அருகே சென்று கொண்டிருந்தது. அந்த லாரியின் பின்னால் அருப்புக்கோட்டையில் இருந்து மதுரை மாட்டுத்தாவணி நோக்கி சென்ற தனியார் பேருந்து வந்தது. இந்நிலையில் லாரி சாலையில் திரும்பியபோது பேருந்து லாரி மீது மோதியது. இதனால் லாரி நடுரோட்டில் கவிழ்ந்தது. அதே நேரம் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து லாரியின் மீது மோதி அதன் மீது ஏறி நின்றதால் 11 பயணிகள் காயமடைந்தனர்.

இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதற்கிடையே தமிழக கவர்னர் ஆர். என்.ரவி அவர்கள் நெல்லை பல்கலைக்கழக பட்டமளிப்பு சென்று விட்டு அந்த வழியாக மதுரை விமான நிலையத்திற்கு வருவதாக இருந்தது. இதனால் உடனடியாக போலீசார் கிரேன் மூலம் லாரியையும், பேருந்தையும் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். இதனை தொடர்ந்து கவர்னரின் வாகனங்கள் இடையூறு இல்லாமல் விமான நிலையத்தை சென்றடைந்தன. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.