மராட்டிய மாநிலத்தில் சமையல் செய்வது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் மனைவியை கணவர் கடுமையாக தாக்கியதாகவும், இதில் படுகாயமடைந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. உயிரிழந்தவர் 38 வயதான யாமினி கிருஷ்ண லால் யாதவ் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக அவரது கணவர் 41 வயதான கிருஷ்ண லால் யாதவை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீஸாரின் முதற்கட்ட விசாரணையின்படி, சம்பவத்தன்று கிருஷ்ண லால் வேலை முடிந்து வீட்டுக்கு வந்தபோது மதுபோதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது மனைவியிடம் உணவு சமைக்குமாறு அவர் கேட்டுள்ளார். ஆனால், குடியிருப்பு வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நடன வகுப்புக்கு செல்ல யாமினி தயாராகிக் கொண்டிருந்ததால் சமையல் செய்ய மறுத்ததாகத் தெரிகிறது. இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

வாக்குவாதம் முற்றிய நிலையில், கிருஷ்ண லால் மனைவியை கழுத்து மற்றும் வயிற்றுப் பகுதியில் தாக்கியதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து யாமினிக்கு கடுமையான வலி மற்றும் வீக்கம் ஏற்பட்டுள்ளது. கணவர் அருகிலுள்ள மருந்தகத்துக்குச் சென்று வலி நிவாரணி வாங்க முயன்றதாகவும், அந்த மருந்தகம் மூடப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. பின்னர் உடல்நிலை மோசமடைந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட யாமினி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

முதலில் இந்த சம்பவம் தற்செயலான மரணம் என வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், பிரேதப் பரிசோதனை அறிக்கை விசாரணையில் திருப்பத்தை ஏற்படுத்தியது. யாமினியின் கழுத்து எலும்பில் முறிவு, கழுத்து நெரிக்கப்பட்டதற்கான அறிகுறிகள் மற்றும் வயிற்றுப் பகுதியில் உள்ள உறுப்புகள், குடலில் கடுமையான பாதிப்புகள் இருந்தது தெரியவந்ததாக போலீஸார் தெரிவித்தனர். இதையடுத்து கணவரிடம் விசாரணை நடத்தி, கொலை வழக்காக மாற்றி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.