தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் பெஞ்சல் புயலாக மாறியுள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மழை வெளுத்து வாங்குகிறது. இன்று சென்னை உட்பட 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் பலத்த சூறாவளி காற்றுடன் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று மாலை காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே கரையை கடக்கிறது. புயல் கரையைக் கடக்கும் நேரத்தில் பல்வேறு பகுதிகளில் மழை வெளுத்து வாங்கும் என்று கூறப்பட்டுள்ள நிலையில் சென்னை உட்பட 7 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

இந்த புயல் இன்று இரவு கரையை கடக்கும் நிலையில் அடுத்த 2 நாட்களுக்கு மேற்கு நோக்கி நகரும். அப்போது திருவண்ணாமலை, சேலம் மற்றும் கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களை கடந்து செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை இது சாத்தியமானால் 47 வருடங்களுக்கு பிறகு கோயம்புத்தூர் எதிர்கொள்ளும் புயல் இதுவாகத்தான் இருக்கும். இதன் காரணமாக கொங்கு மண்டலத்தில் சுமார் 20 செண்டிமீட்டர் அளவிற்கு மழை பொழிய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கோயம்புத்தூரில் புயல் வரலாம் என்று கோவை வெதர்மேன் என்று அழைக்கப்படும் தனியார் வானிலை ஆய்வாளர் சந்தோஷ் கிரிஷ் தெரிவித்துள்ளார்.