பஞ்சாப் மாநிலத்திலுள்ள ஆசிரியர்களுக்கு கல்வி தகுதிகள் மற்றும் பணியில் சேர்வதற்குரிய தகுதியின் அடிப்படையில் சம்பளம் நிர்ணயிக்கப்படுகிறது. அதோடு ஒவ்வொரு வருடமும் ஆசிரியர்களுக்கு 5 சதவீத ஊதிய உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், பிஏ தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு ரூ.9500 ஊதியமாக வழங்கப்பட்டு வருகிறது. ETT, NTT தகுதிபெற்ற ஆசிரியர்களுக்கு ரூ.10,250 மாத சம்பளமாக வழங்கப்படுகிறது.

இந்த நிலையில் பஞ்சாப்பில் பணி நிரந்தரம் செய்யப்பட்ட 12,700 ஆசிரியர்களின் சம்பளம் 3 மடங்காக உயர்த்தப்பட்டு இருப்பதாக அம்மாநில முதல்வர் பகவந்த் மான் தெரிவித்து உள்ளார். அதன்படி, பிஏ தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு ரூ.9500 வழங்கப்பட்டு வந்த நிலையில், இப்போது அவர்களின் ஊதியம் 20,500 ஆக உயர்த்தப்பட்டு இருக்கிறது. ETT மற்றும் NTT தகுதிபெற்ற ஆசிரியர்களுக்கு ரூ.10,250 வழங்கப்பட்டு வந்த நிலையில், இப்போது ஊதியம் 22,000 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது.

பிஏ, எம்ஏ மற்றும் பிஎட் பட்டம் பயின்ற ஆசிரியர்களுக்கு 23,500 ஊதியம் வழங்கப்படும் என்றும் ஆசிரியர்களுக்கான இழப்பீடுத் தொகை ரூ.15,000 ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது என்றும் கூறப்பட்டுள்ளது. அதோடு கல்வித் தொண்டர்களுக்கு ரூ.15,000 சம்பளமாக வழங்கப்படும் என்றும்  வேலைவாய்ப்பு உறுதி திட்டம் மற்றும் புதுமையான கல்வி போன்றவற்றின் கீழ் சம்பாதிக்கும் ஆசிரியர்களுக்கு ரூ.18000 சம்பளம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.