தமிழகம் மற்றும் புதுச்சேரி மீன்பிடி துறைமுகங்களில் இருந்து நேற்று மீன் பிடிக்கக் கடலுக்குச் சென்ற 35 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
இவர்கள் அனைவரும் இலங்கையின் கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்ததாகக் கூறி இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தத் தொடர்ச்சியான கைது நடவடிக்கைகளால் இந்திய மீனவர் குடும்பங்கள் மீண்டும் ஒருமுறை சோகத்திலும், அச்சத்திலும் ஆழ்ந்துள்ளன.
கைது செய்யப்பட்ட 35 மீனவர்களும் முதற்கட்ட விசாரணைக்காக இலங்கை கடற்படையின் வசம் வைக்கப்பட்டுள்ளனர். விசாரணைக்குப் பிறகு, மீனவர்கள் அனைவரும் யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் முறையாக ஒப்படைக்கப்படுவார்கள் என்று இலங்கை கடற்படையின் செய்தித் தொடர்பாளர் தகவல் தெரிவித்துள்ளார்.
மேலும், அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், மீனவர்களை உடனடியாக விடுவிக்க இந்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
