இந்தியாவில் 2000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டும், ஒரு மோசடிக் கும்பல், இது தெரியாத அப்பாவி மக்களிடம் இருந்து அந்த நோட்டுகளைச் சேகரித்துள்ளது. “சிறப்பு பூஜைகள் செய்தால் பணமழை கொட்டும்” என்று ஆசை காட்டி, குறிப்பிட்ட சில வரிசை எண்கள் (சீரியல் நம்பர்) கொண்ட 2000 ரூபாய் நோட்டுகளை மட்டும் கேட்டு வாங்கியுள்ளனர்.
மேலும், இந்த நோட்டுகளின் அசல் வரிசை எண்களை அழித்துவிட்டு, அதற்குப் பதிலாக வேறு எண்களை எழுதியுள்ளனர். இந்தக் கும்பலிடம் இருந்து, மொத்தம் 18 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 2000 ரூபாய் நோட்டுகளை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். கடந்த மாதம், இந்த மோசடி குறித்து ரிசர்வ் வங்கி (RBI) புகார் அளித்த பிறகு போலீஸார் விசாரணையைத் தொடங்கினர். கடந்த மாதம் 24-ஆம் தேதி, கப்பன்பெட்டையைச் சேர்ந்த ஒருவர் வங்கியில் 40 ஆயிரம் ரூபாய் டெபாசிட் செய்ய முயன்றபோது முதன்முதலில் சிக்கினார்.
அவர் அளித்த தகவலின் பேரில் அவரது இரண்டு கூட்டாளிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து மேலும் 8 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. அதைத் தொடர்ந்து, அடுத்தடுத்த நாட்களில் மேலும் பலரை (மொத்தம் 9 பேர்) போலீஸார் கைது செய்தனர். இந்த கும்பல், குறிப்பாக 2018-ஆம் ஆண்டு அச்சிடப்பட்ட M, N, O, P மற்றும் G வரிசை எண்களைக் கொண்ட 2000 ரூபாய் நோட்டுகளை மட்டுமே குறி வைத்து வாங்கியுள்ளனர்.
