ராஜஸ்தான் மாநிலம் ஃபாலோடி அருகே உள்ள மடோடா பகுதியில், இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை நிகழ்ந்த கோர விபத்தில் 18 பக்தர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
பிகானூரில் உள்ள கோலாயத் கோயில் தரிசனத்தை முடித்துவிட்டு ஜோத்பூர் சூர சாகர் பகுதியைச் சேர்ந்த மாலி சமூகத்தினர் டெம்போ டிராவலர் வாகனத்தில் திரும்பிக் கொண்டிருந்தபோது, சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த ஒரு டிரெய்லர் லாரி மீது வாகனம் அதிவேகமாக மோதியது.
அதிகாலை நேரம், பனிமூட்டம் மற்றும் குறைந்த வெளிச்சம் காரணமாக டிரெய்லர் லாரியை டெம்போ டிராவலர் ஓட்டுநர் கவனிக்கத் தவறியதே விபத்திற்குக் காரணம் என போலீஸார் தெரிவித்தனர். விபத்தில் வாகனத்தின் முன்பகுதி உருக்குலைந்து உள்ளே பலர் சிக்கிக்கொண்டனர்.
உள்ளூர்வாசிகள் மற்றும் மீட்புப் படையினர் போராடி சடலங்களையும் காயமடைந்தவர்களையும் மீட்டனர். இந்தச் சம்பவம் இதயத்தை நொறுக்குவதாக உள்ளது எனத் தெரிவித்த முதல்வர் பஜன் லால் சர்மா, காயமடைந்தவர்களை விரைந்து மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சிறந்த சிகிச்சை அளிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
