உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தில், சவுரப் ராஜ்புத் கொலை வழக்கைப் போலவே அதிர்ச்சியூட்டும் கொலைச் சம்பவம் ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அக்பர்பூர் சதாத் கிராமத்தைச் சேர்ந்த 25 வயதான அமித் காஷ்யப் என்ற மிக்கி என்றவர், ஞாயிற்றுக்கிழமை அவரது வீட்டில் இறந்த நிலையில் கிடந்தார். அவரது உடலின் கீழ் ஒரு உயிருள்ள பாம்பு இருப்பதைக் கண்டதும், முதலில் இது விஷப் பாம்பு கடித்து மரணம் அடைந்தது என எண்ணப்பட்டது.

மரணத்துக்குப் பின்னர் பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்கள், பாம்பு கடியால் மரணம் அல்ல, மூச்சுத் திணறலால் உயிரிழந்துள்ளதாகத் தெரிவித்தனர். இதனால் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர். சந்தேகத்திற்கிடையே அமித்தின் மனைவி ரவிதாவும், அவரது காதலன் அமர்தீப்பும் கைது செய்யப்பட்டனர். விசாரணையில், இருவரும் கூட்டு சதியால் அமித்தை கழுத்தை நெரித்து கொன்றதும், பிறகு விபத்தாக மாற்ற பாம்பை பயன்படுத்தியதும் உறுதி செய்யப்பட்டது.

விசாரணையில் வந்த அதிர்ச்சி தகவலின் படி, அமர்தீப் ரூ.1000-க்கு பாம்பைப் பெற்று, அதனை அமித்தின் படுக்கையினடியில் விட்டுள்ளார். இறந்த உடலில் பாம்பு கடித்த 10 அடையாளங்கள் இருந்தபோதும், உண்மையில் பாம்பு கடிக்கவில்லை என்பது மருத்துவ அறிக்கையில் உறுதி செய்யப்பட்டது. இந்த சம்பவம் முழுக்க பாம்பு கடித்தது போல காட்ட முயன்ற அழுத்தமான சதி என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

மனைவியின் காதல் தொடர்பு காரணமாக கணவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பதட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளிகள் யூடியூப் மற்றும் கூகுளில் விஷப் பாம்புகள் மற்றும் கொலை செய்யும் முறைகளை தேடியதும் போலீசாரால் கண்டறியப்பட்டுள்ளது. தற்போது இருவரும் 14 நாள் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளனர். கிராம மக்கள் இடையே ஏற்கனவே இருவரது தொடர்பு குறித்து சந்தேகம் இருந்ததால், கொலையை மறைக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.