உத்தரப்பிரதேச மாநிலம் பாராபங்கி மாவட்டத்தில் உள்ள சாயா சௌராஹா பகுதியில், அமித் ரஸ்தோகி என்ற நபர் ‘நியூ பேபி ஜுவல்லர்ஸ்’ என்ற நகைக்கடையை நடத்தி வந்தார். சில மாதங்களுக்கு முன் அவர் ரத்த புற்றுநோயால் உயிரிழந்தார். இவருக்கு ஸ்வீட்டி ரஸ்தோகி என்ற மனைவி, 14 வயது மகன் மற்றும் 8 வயது மகள் உள்ளனர். கணவர் மரணத்துக்குப் பிறகு, குழந்தைகளையும் கடையின் பொறுப்பையும் அமித்தின் குடும்பத்தினர் ஏற்றுக்கொண்டனர்.

இந்த நிலையில், அமித்தின் தாயார் புஷ்பா தேவி அளித்த புகாரில், மருமகள் ஸ்வீட்டி நடத்தை மாறி, அதே நகரைச் சேர்ந்த ஹர்ஷித் ராஜ்வீருடன் உறவு வைத்திருந்ததாக கூறப்பட்டிருக்கிறது. மேலும், வீட்டில் உள்ள லாக்கரில் வைக்கப்பட்டிருந்த சுமார் ஒரு கிலோ தங்க நகைகள் மற்றும் பிற விலையுயர்ந்த நகைகளை ஸ்வீட்டி திருடி, அந்த நபரிடம் ஒப்படைத்து அவருடன் தப்பிச் சென்றதாக குற்றம்சாட்டியுள்ளார். இந்த நகைகளில் அமித்தின் தனிப்பட்ட நகைகள்,  முன்னோர்களின் நகைகள் மற்றும் அவரது மகளின் எதிர்கால திருமணத்திற்காக வைத்திருந்த நகைகளும் உள்ளன.

குடும்பத்தினர் லாக்கரை திறந்தபோது நகைகள் காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். வீடு மற்றும் கடையில் இருந்த சிசிடிவி காட்சிகளை சரிபார்த்ததில், ஸ்வீட்டி தனியாக நகைகளை எடுத்து செல்லும் காட்சிகள் தெளிவாக பதிவாகி இருந்தன. ஜூன் 28 ஆம் தேதி குடும்பத்தினர் நேரில் சந்தித்த போது, ஸ்வீட்டி தனது செயல்களை ஒப்புக்கொண்டு, நகைகளை மீட்டுத் தருவதாக உறுதியளித்தார். ஆனால் அதே இரவு அமைதியாக வீட்டைவிட்டு வெளியேறி, காதலன் ஹர்ஷித் ராஜ்வீருடன் தப்பிச் சென்றார்.

இந்த தகவலை ஸ்வீட்டியின் சகோதரரிடம் தெரிவித்த போது, அவர் ஹர்ஷித்தை தொடர்பு கொண்டதாகவும், ஆனால் ஹர்ஷித் “அவளைத் தேடினால் உடலை கூட காண முடியாது” என்று மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவத்தின் அடிப்படையில், நகர் கோட்வாலி காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் குடும்பத்தினர் இழந்த நகைகள் மீட்கப்பட வேண்டும் என்றும், குற்றம் செய்தவர்களுக்கு தக்க தண்டனை கிடைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.