மகாராஷ்டிரா மாநிலம் தராசிவில் உள்ள ஆர்.ஜி.ஷிந்தே கல்லூரியில் நடைபெற்ற விடைபெறுதல் விழாவின் போது, ஒரு மாணவி உரையாற்றிக் கொண்டிருந்தபோது திடீரென நிலைதடுமாறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வர்ஷா காரத் என்ற மாணவி, பி.எஸ்.சி படித்து வந்தார். ஏப்ரல் 3ஆம் தேதி வியாழக்கிழமை நடைபெற்ற விழாவில், உரையாற்றி கொண்டிருந்தபோது திடீரென மயங்கி தரையில் விழுந்தார்.

உடனடியாக கல்லூரியினர் மற்றும் மாணவர்கள் அவரை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் மருத்துவர்கள் வர்ஷாவை பரிசோதித்த பிறகு, ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர்.

இந்த துயர சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், வர்ஷா விழுவதற்கு சில வினாடிகள் முன்பு புன்னகையுடன் பேசிக் கொண்டிருப்பது பதிவாகியுள்ளது.

மாணவி திடீரென உயிரிழந்ததற்கான காரணம் குறித்து போலீசார் மற்றும் மருத்துவர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சோகமான சம்பவம் அவருடைய நண்பர்கள், ஆசிரியர்கள் மற்றும் குடும்பத்தினரை பெரும் அதிர்ச்சிக்கும், வேதனைக்கும் உள்ளாக்கியுள்ளது.