அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவரிடம் சசிகலா செய்தியாளர்கள் சந்திப்பின்போது ஆளுநருக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை மாநில அரசு ஒழுங்கான முறையில் கொடுக்க வேண்டும் என்று கூறியது குறித்தும், ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் உட்பட நாங்கள் அனைவரும் நாடாளுமன்ற தேர்தலில் ஒரு அணியாக திரண்டு திமுகவை வீழ்த்த வேண்டும் என்று கூறியது குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு முன்னால் அமைச்சர் ஜெயக்குமார், இதைப் பற்றி எல்லாம் பேசுவதற்கு சசிகலா யார். அதிமுக விவகாரத்தில் அவர் மூக்கை நுழைக்கக் கூடாது. அதிமுக கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் சிறப்பான முறையில் கட்சி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

சசிகலா கூறும் கருத்துக்களை எல்லாம் அதிமுகவில் பெரிதாக எடுத்துக் கொள்ள முடியாது. சசிகலா தனிப்பட்ட முறையில் எந்த கருத்தையும் சொல்வதற்கு அவருக்கு உரிமை இருக்கிறது. அதன் பிறகு ஓபிஎஸ், டிடிவி ஆகியோருடன் இணைந்து சசிகலா வேண்டுமானால் தனிக்கட்சி ஆரம்பிக்கட்டும். அதற்கு நான் குறுக்கே நிற்க மாட்டேன். இது ஜனநாயக நாடு என்பதால் யார் வேண்டுமானாலும் தனிக்கட்சி ஆரம்பித்து கொள்ளலாம் என்று கூறினார். மேலும் தற்போது இருக்கும் சூழ்நிலையில் அதிமுகவில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என பாஜக உட்பட அரசியல் பார்வையாளர்களும் கூறிவரும் நிலையில், அதிமுகவில் அவர்களை இணைப்பதற்கு வாய்ப்பே இல்லை என்று ஜெயக்குமார் சொன்னது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.