தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு செயற்கைக்கோள் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் படி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள மாணவ- மாணவிகள் தேர்வு செய்யப்பட்டனர். இந்த திட்டத்தின் கீழ் மூன்று கட்டங்களாக தேர்வு செய்யப்பட்ட 75 மாணவ-மாணவிகள் சமீபத்தில் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ராக்கெட் ஏவப்படுவதை நேரில் சென்று பார்த்தனர். இவர்களில் திருவள்ளுவர் மாவட்டத்தை சேர்ந்த இவாஞ்சலின் மற்றும் அனுஷா ஷிவானி என்ற 9-ம் வகுப்பு படிக்கும் இரு மாணவிகளும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இந்தியாவின் 75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு உருவாக்கப்படும் 75 செயற்கை கோள்களில் ஒன்றை உருவாக்கும் வாய்ப்பினை பெற்றுள்ளனர். செயற்கைக்கோள் உருவாக்கும் வாய்ப்பை பெற்ற மாணவிகளுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. அதன் பிறகு கடந்த நவம்பர் மாதம் 2-ம் தேதி முதல் 5-ம் தேதி வரை மாணவிகளுக்கு பெங்களூருவில் உள்ள இஸ்ரோ மையத்தில் முறையாக பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும் இந்த மாணவிகள் அகத்தியர் என்ற பெயரில் தற்போது செயற்கைக்கோள்களை உருவாக்க இருக்கிறார்கள்.