தெலுங்கானா மாநிலம் சித்திபேட்டில் செயல்பட்டு வந்த ஒரு தனியார் ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 37 ஆக உயர்ந்துள்ளது. இதனால் அந்தப் பகுதில் பெரும் சோக நிலை உருவாகியுள்ளது.

இவ்விபத்து நேற்று ஏற்பட்டது. தொழிற்சாலையில் உள்ள ஒரு முக்கிய ரியாக்டர் பராமரிப்பு செய்யப்படாத நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது. திடீரென அதில் வெடிப்பு ஏற்பட்டதால் தீப்பிடித்து விபத்து ஏற்பட்டது. அந்த நேரத்தில் பல ஊழியர்கள் உள்ளே பணியாற்றிக் கொண்டிருந்தனர் என்பதாலேயே பலியானோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த வெடிப்பில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் படுகாயமடைந்துள்ளனர். இதில் 35 பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதால் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பலருக்கு தீக்காயங்கள், மூச்சுத் திணறல் மற்றும் உடல் பிளவு ஏற்பட்டுள்ளன. இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.

இது தொடர்பாக தெலுங்கானா அரசு விரைந்து நடவடிக்கை எடுத்துள்ளது. உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளை மேற்பார்வையிட்டு வருகின்றனர். உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு நிவாரண தொகை அறிவிக்கப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த விபத்து தொடர்பாக தொழிற்சாலையின் பாதுகாப்பு அம்சங்கள் மீதான கேள்விகள் எழுந்துள்ளன. சம்பந்தப்பட்ட தொழிற்சாலை மேலாளர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தொழிலாளர் சங்கங்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மேலும் இத்தகைய பாதுகாப்பு விழிப்புணர்வு நடவடிக்கைகள் எதிர்காலத்தில் கட்டாயப்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.