
விஜயபுராவில் உறவினர் திருமண விழாவில் மகிழ்ச்சியாக நடனமாடிக் கொண்டிருந்த இளைஞர் ஒருவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தது, பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் மே 24ஆம் தேதி விஜயபுரா நகரின் சப்பர்பண்டா காலனியில் நடைபெற்றது.
அதாவது முகமது பைகம்பர் (வயது 28) என அடையாளம் காணப்பட்ட இளைஞர், ஒரு அலுமினியக் கடையில் பணியாற்றி வந்தவர். குடும்ப உறவினர் ஒருவரின் திருமண விழாவில் கலந்து கொண்டிருந்த அவர், அங்கிருந்தவர்களுடன் சேர்ந்து மகிழ்ச்சியாக நடனமாடிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென மயங்கி விழுந்தார்.
உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோதும், மருத்தவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக அறிவித்தனர். அந்த வாலிபரின் மரணம் மாரடைப்பால் ஏற்பட்டதாக மருத்துவத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இளைஞரின் திடீர் மரணம் அவரது குடும்பத்தினருக்கும், திருமண நிகழ்வில் இருந்த அனைவருக்கும் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.