மேட்டூர் அருகே ஏழை, எளிய மக்களுக்கு வழங்கிய இலவச வீட்டுமனை பட்டா இடத்தை தனி நபர்கள் ஆக்கிரமிப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது

சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அடுத்த அவடத்தூர் பஞ்சாயத்து காமராஜர் நகரில் கடந்த 2008-ஆம் ஆண்டு வீட்டுமனை பட்டா ஏழை எளிய மக்களுக்கு தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்டது. இந்த நிலையில் காமராஜர் நகரில் குப்பைமேடு பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் மற்றும் சிவராஜ் ஆகியோர் அந்த இடத்தை ஆக்கிரமிப்பு செய்து வீடு கட்டி வருகின்றனர்.

இதனால் 50-க்கும் மேற்பட்டோர் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடத்தை முற்றுகையிட்டு போராடியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஜேசிபி எந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்படும் வீட்டை இடிக்க முயற்சி செய்தனர். அதனை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் தடுக்க முயன்றதால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.