சமீபத்தில் லட்சத்தீவுக்கு பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி அவர்கள் அந்த தீவின் சுற்றுலா துறையை மேம்படுத்துவதற்காக அழகான கடற்கரை பகுதிகளில் வீடியோ மற்றும் புகைப்படங்கள் எடுத்து அவரது சமூக வலைதளத்தில் வெளியிட்டார்.

இது சுற்றுலாத் துறையை மட்டுமே நம்பி இருக்கும் மாலத்தீவு அரசுக்கு அதிர்ச்சி அளித்தது. இதனால் பிரதமர் மோடிக்கு எதிராகவும் இந்தியாவுக்கு எதிராகவும் மாலத்தீவு அமைச்சர்கள் அவதூறாக விமர்சனங்களை வைத்தனர்.

இதற்கு பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில் மாலத்தீவு அமைச்சர்கள் மூன்று பேர் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதனிடையே இந்தியாவில் இருந்து மாலத்தீவுக்கு செல்வதற்காக முன்பதிவு செய்யப்பட்ட விமான டிக்கெட்டுகளை பயணிகள் ரத்து செய்துள்ளனர்.

அதேபோன்று மாலத்தீவு விடுதிகளில் தங்குவதற்கு செய்யப்பட்ட முன்பதிவுகளிலும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் மாலத்தீவின் எம்பி ஈவா அப்துல்லா பேட்டி ஒன்றில் “இந்தியர்கள் நியாயமான கோபத்தில் தான் இருக்கின்றனர். மாலத்தீவு அமைச்சர்கள் பதிவிட்ட கருத்துக்கள் மூர்க்கத்தனமானது தான், வெட்கக்கேடானதும் கூட.

இதற்காக தனிப்பட்ட முறையில் இந்திய மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். மாலத்தீவுக்கு விடுமுறையை கழிப்பதற்கு இந்திய மக்கள் வரவேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்” என கூறியுள்ளார்.