
சசிகுமார், இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர் என பல தளங்களில் தன்னுடைய தனிச்சிறப்பை வெளிப்படுத்தியவர். இயக்குநர்களான பாலா மற்றும் அமீர் ஆகியோரிடம் உதவி இயக்குநராகக் பணிபுரிந்த சசிகுமார், 2008ஆம் ஆண்டு சுப்பிரமணியபுரம் படத்தின் மூலம் இயக்குநர் மற்றும் நடிகராகவும் வெற்றிகரமான அடித்தளத்தை ஏற்படுத்தினார்.
அதன் பிறகு ஈசன், பசங்க உள்ளிட்ட படங்களை தயாரித்து, நாடோடிகள், போராளி, சுந்தரபாண்டியன், தாரை தப்பட்டை, வெற்றிவேல் போன்ற பல குடும்பப் படங்களில் நடித்து, மக்களின் மனதில் ஒரு நம்பிக்கையான நடிகராக மாறினார்.
தற்போது நடிகை சிம்ரனுடன் இணைந்து நடித்துள்ள டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் வெளியான நிலையில், ரசிகர்களிடமிருந்து நல்ல வரவேற்பு பெற்று ஹவுஸ்புல் காட்சிகளுடன் வெற்றிகரமாக ஓடி வருகிறது. இந்தப் படத்தின் வெற்றிவிழாவில் கலந்து கொண்ட சசிகுமார், முதல் முறையாக தனது குடும்பம் பற்றிய ஒரு உணர்ச்சிகரமான பகிர்வை வெளியிட்டுள்ளார்.
“எனக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். ஆனால், அவர்கள் கிராமத்தில் சாதாரண வாழ்க்கை வாழ்கிறார்கள். பஸ், ஆட்டோ என பொதுப் போக்குவரத்தை பயன்படுத்தி இயல்பாக வாழ்ந்து வருகிறார்கள். அவர்களை மீடியாவில் காட்டாமல் இருப்பதால்தான் அவர்கள் இயல்பான வாழ்க்கையை தொடர முடிகிறது,” என கூறியுள்ளார்.
சசிகுமாரின் இந்தக் கருத்துக்கள் அவரது சினிமா வாழ்விலும், தனிப்பட்ட வாழ்க்கையிலும் ஒரே நிலைப்பாட்டுடன் நடக்கிறார் என்பதையும், தன்னுடைய குடும்பத்தை ஊடக பிரபலம் இல்லாமல் பாதுகாக்கும் பாசத்தையும் வெளிப்படுத்துகிறது. இவரது நேர்மையான இந்த அணுகுமுறை, ரசிகர்கள் மத்தியில் மேலும் மதிப்பையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது.