
பிக்பாஸ் என்பது கடந்த 2017 ம் ஆண்டில் இருந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஒரு ரியாலிட்டி நிகழ்ச்சி. இதில் மொத்தம் 20 போட்டியாளர்கள் பங்கேற்பார்கள். இவர்களை செல்போன் மற்றும் இன்டர்நெட் வசதி இல்லாத ஒரு வீட்டில் 100 நாட்கள் இருக்க வைப்பதோடு, இவர்களே சமைத்து சாப்பிடுவதும் உண்டு. அதோடு இவர்களுக்கு வித்தியாச வித்தியாசமான போட்டிகளும் கொடுக்கப்படும். இந்த நிகழ்ச்சி 7 சீசன்கள் முடிவடைந்த நிலையில், தற்போது 8-வது சீசன் தொடங்க இருக்கிறது. இந்நிலையில் தற்போது இந்த நிகழ்ச்சியின் 7 சீசன்களை தொகுத்து வழங்கிய நடிகர் கமல்ஹாசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியதாவது, திரைப்பட பணிகளில் முழு ஈடுபாட்டுடன் இருப்பதால், என்னால் பிக்பாஸ் சீசன் 8-யில் தொகுத்து வழங்க முடியாது என்று கூறியுள்ளார். அதனால் அடுத்த தொகுப்பாளர் யார் என்று கேள்வி மக்களின் மத்தியில் எழுந்துள்ளது. இதைத்தொடர்ந்து முந்தைய சீசனில் கமலஹாசனுக்கு கொரோனா வந்ததால், அவருக்கு பதிலாக நடிகர் சிம்புவும், மற்றொரு நாள் நடிகை ரம்யா கிருஷ்ணனும் தொகுத்து வழங்கினர். அதனால் கமலஹாசனுக்கு அடுத்து நடிகர் சிம்பு தொகுத்து வழங்குவார் என்ற தகவல் வெளியானது.
இதனால் பிக்பாஸ் நிகிழ்ச்சியின் அடுத்த தொகுப்பாளார்க்கு அதிக சம்பளம் கொடுக்க தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதற்காக நடிகர் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் மற்றும் நயன்தாரா உடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் தன்னுடைய கேரியரை முதன் முதலாக விஜய் தொலைக்காட்சியில் ஆரம்பித்ததால் அவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் தொகுப்பாளராக களமிறங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாராவிடம் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதால், இவர்களில் ஒருவர் தொகுப்பாளராக மாற வாய்ப்பு இருப்பதாகவும், விஜய் சேதுபதிக்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாராவுடன் இறுதி கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இருவரில் ஒருவர் இறுதி செய்யப்பட்டு விரைவில் பிக்பாஸ் படபிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.