ஆளுநர் ஆர்.என் ரவியினுடைய கருத்துக்கள் பலமுறை சர்ச்சைகளை ஏற்படுத்திய நிலையில் ஆளுநர் மாளிகையில் அவர் பேசிய கருத்து ஒன்று தற்போது ஹாட் டாபிக்காக மாறி உள்ளது. அதாவது ஆளுநர் மாளிகையில் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர்களை சிறப்பிக்கும் விதமாக நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இதில் பேசிய ஆளுநர் ஆர்.என் ரவி தமிழகத்தில் ஒரு வித்தியாசமான அரசியல் சூழல் உள்ளது. எல்லாவற்றிற்கும் நாங்கள் திராவிடர்கள் என்று சொல்கிறார்கள். இந்தியா முழுவதுமாக ஒரு செயல் திட்டம் இருந்தால் அதை வேண்டாம் என்கிறது தமிழ்நாடு. முதலில் தமிழ்நாடு என்று சொல்வதைவிட தமிழகம் என்று சொல்வதுதான் சரியாக இருக்கும் என்று கூறினார்.

ஆளுநருடைய இந்த பேச்சு கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இதற்கு முக்கிய அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில்தமிழ்நாடு என்பதை தமிழகம் என்று சொல்வதே சரி என ஆளுநர் ரவி இரு தினங்களுக்கு முன்பாக பேசியது சர்ச்சையானது. இதுகுறித்து இன்று பேட்டியளித்த சீமான், தமிழ்நாடு என்னும் பெயரானது அண்ணாவிற்கு முன்னதாக பயன்பாட்டில் இருந்ததுதான். தமிழ்நாடு என்று கவிதையில் பாரதியார் பாடியுள்ளார். எங்கள் நாடு தமிழ்நாடு. இஷ்டம் இருந்தால் இரு. இல்லையேல் ஓடு என்று காட்டமாக ஆளுநரை விமர்சனம் செய்துள்ளார்.