இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் 5ஆம் தேதி ஆசிரியர்கள் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் ஐந்தாம் தேதி உலக ஆசிரியர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. மற்றவரின் குழந்தைகள் முன்னேற உழைப்பவர்களாக இருப்பவர்கள் தான் ஆசிரியர்கள். ஊழியத்திற்காக வேலை பார்க்கிறோம் என்ற எண்ணத்தையும் தாண்டி பல தியாகங்களை ஆசிரியர்கள் அர்ப்பணிப்புடன் மாணவர்களுக்கு செய்கின்றனர். ஆசிரியர்களின் பொறுப்புகள், உரிமைகள் மற்றும் மதிப்பை பெருமைப்படுத்தும் விதமாக உலக ஆசிரியர்கள் தினம் கொண்டாடப்படுகிறது.

உலக ஆசிரியர்கள் தினத்தில் ஆசிரியர்களின் சேவை மற்றும் கல்விப் பணியில் அவர்களின் பங்களிப்பு அங்கீகரிக்கப்படுகின்றது. போதுமான அளவு ஆசிரியர் பணியிடங்களை நிரப்புதல், பயிற்சி மற்றும் கல்வி உள்ளிட்டவற்றில் காணப்படும் ஆசிரியர் தொழில் தொடர்பான சவால்களை கருத்தில் கொள்ள இந்த நாள் ஒரு நல்ல வாய்ப்பாக உள்ளது. தினம்தோறும் ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை தீர்க்க மற்றும் அவர்களின் உரிமைகள் மற்றும் பொறுப்புகளை அங்கீகரிப்பதற்காக இந்த நாள் அனுசரிக்கப்படுகின்றது. உலகெங்கிலும் உள்ள ஆசிரியர்களின் பணி நிலைமைகள் மற்றும் வேலை வாய்ப்புகளில் இந்த நாள் கவனம் செலுத்துகின்றது.