சென்னையின் பெருநகர காவல் ஆணையராக இருந்த சங்கர் ஜிவால் தமிழகத்தின் புதிய டிஜிபியாக பதவி வகித்தார். இதன் பிறகு சென்னைக்கு புதிய காவல் ஆணையராக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார். இவர் பதவி ஏற்றத்தை அடுத்து மாநகர காவல் துறையில் பல்வேறு அதிரடியான மாற்றங்களை கொண்டு வந்துள்ளார். குறிப்பாக ரவுடிகளின் அட்டகாசத்தை தடுக்கவும், குற்ற செயல்களை குறைக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறார். இந்த நிலையில் காவல் நிலையங்களில் பாதுகாப்பு உறுதி செய்ய அவர் முக்கிய சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில், பெரும்பாலான காவல் நிலையங்களில் இரவு நேரத்தில் ஒரு காவலர் மட்டுமே பணியில் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் காவல் நிலையங்களின் பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறியிருக்கிறார். ஒவ்வொரு காவல் நிலையத்திலும் கூடுதலாக இரண்டு காவலர்கள் மற்றும் கூடுதல் ஊர்காவல் படை வீரர்கள் பணியில் இருக்க வேண்டும். இந்த உத்தரவை காலம் தாழ்த்தாமல் உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார். அது மட்டுமில்லாமல் இரவு நேரங்களில் காவலர்கள் ரோந்து செல்வதை அதிகப்படுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார்.