உங்களில் ஒருவன் தொடரில் முதல்வர் ஸ்டாலின் பல கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார். அவர் பிரதமர் நரேந்திர மோடி, ஆளுநர் ரவி மற்றும் தமிழக அரசின் பல்வேறு செயல்பாடுகள் குறித்து பேசி உள்ளார். அதன்படி புதுமைப்பெண் திட்டம், கள ஆய்வில் முதல்வர் திட்டம் போன்ற திட்டங்களின் பயன் குறித்து முதல்வர் ஸ்டாலின் பேசினார். அதன் பிறகு திமுக பொய் வாக்குறுதிகளை கொடுத்து திமுக ஏற்கனவே வெற்றி பெற்றுவிட்டது என எடப்பாடி பழனிச்சாமி கூறியது தொடர்பான கேள்விக்கு, தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு நடத்த அனுமதி கொடுத்துவிட்டு டிவியில் பார்த்து தான் தெரிந்து கொண்டேன் என்று சொன்னாரே அவர் இதைப் பற்றி பேசலாமா? திமுக தேர்தல் வாக்குறுதிகளாக சொன்னவைகளில் பல நிறைவேற்றப்பட்டுள்ளது.

மீதமுள்ள திட்டங்களும் இன்னும் ஓர் ஆண்டுக்குள் நிறைவேற்றப்படும் என்றார். நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி அதானி விவகாரம் மற்றும் பிபிசி ஆவணப்படம் குறித்து விளக்கம் அளிக்கவில்லை. அதோடு சேது சமுத்திர திட்டம், நீட்விலக்கு மசோதா போன்ற பல்வேறு கேள்விகளுக்கு பிரதமர் மோடி பதிலளிக்கவில்லை என்றார். திமுக ஆட்சியை கலைத்த காங்கிரசுடன் பாஜக கூட்டணி வைக்கலாமா என்ற கேள்விக்கு பாஜக ஆட்சியை கலைத்த அதிமுகவுடன் கூட்டணி வைக்கலாமா என்று முதல்வர் பதிலடி கொடுத்தார்.

ஆன்லைன் ரம்மியால் பலர் உயிரிழந்து வரும் நிலையில் அதற்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல் இருப்பது மர்மமாக இருக்கிறது. ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் தமிழ்நாடு அரசு புறக்கணிக்கப்பட்டுள்ளதா என்ற கேள்விக்கு ஆமாம் என்று பதில் அளித்த முதல்வர் தமிழகத்திற்கு அறிவித்த ஒரே திட்டம் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை மட்டும்தான். ஆனால் அந்த திட்டத்தை கூட இதுவரை செய்து முடிக்கவில்லை என்று கூறினார். மேலும் என்னுடைய பணிகள் எதிர்க்கட்சிளை நிலைகுலைய வைத்திருப்பதோடு அவர்களுக்கு அரசியல் செய்யவும் நான் வாய்ப்பு கொடுக்காததால் தான் எதிர்க்கட்சிகளுக்கு என் மீது கோபம் என்றும் கூறினார்.