ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ திருமகன் ஈ.வெ.ரா உயிரிழந்ததை தொடர்ந்து வருகிற பிப்ரவரி 27-ஆம் தேதி அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று முதல் வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. முதல் நாளான இன்று வேட்பு மனு தாக்கல் செய்ய 11 சுயேச்சைகள் வருகை தந்த நிலையில் ஆறு பேரின் வேட்பு மனுவில் திருத்தம் இருந்த காரணத்தினால் ஐந்து பேர் மட்டும் முதல் நாளில் தாக்கல் செய்துள்ளனர். இதனையடுத்து தி.மு.க கூட்டணி சார்பாக இந்த தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் இ.வி.கே.எஸ் இளங்கோவன் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அ.தி.மு.க கூட்டணி வேட்பாளர் குறித்து இதுவரை அறிவிக்கப்படவில்லை.

இதற்கு இடையே அ.ம.மு.க, தே.மு.தி.க நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்துள்ளனர். மேலும் வேட்பு மனு தாக்கல் வருகிற பிப்ரவரி 7-ஆம் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும் என கூறப்பட்டுள்ளது. அதேபோல் பிப்ரவரி 8-ம் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனை நடைபெறுகிறது. இதனை தொடர்ந்து வேட்பு மனுக்களை திரும்ப பெற பிப்ரவரி 10ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.