ரோடு கிழக்கு இடைத் தேர்தலில் பாஜக போட்டியிடாவிட்டால் பன்னீர்செல்வம் அணி போட்டி என்று ஜேசிடி பிரபாகரன் அறிவித்துள்ளார்..

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கு  இடைத்தேர்தல் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. இந்த சூழலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டு, ஈவிகேஎஸ் இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். பிரதான எதிர்க்கட்சியான அதிமுக வேட்பாளர்களை அறிவிக்காமல் இருந்தது. அதிமுகவில் இரு பிரிவாக இருந்து வரும் நிலையில் ஓ பன்னீர்செல்வம் தன்னுடைய தலைமையிலான அணியினர் போட்டியிடுவார்கள் என்று தெரிவித்த நிலையில், தொடர்ந்து அதிமுக வேட்பாளரை அறிவிக்காமல் இருந்தது.

இதனிடையே அதிமுக கூட்டணியில் உள்ள பாஜகவும் இடைத்தேர்தல் தொடர்பாக எந்த கருத்தும் தெரிவிக்காமல் மௌனம் காத்துவருகிறது. இந்நிலையில் பாஜக போட்டியிட்டால் அவர்களை ஆதரிக்க தயார் என்றும், பாஜக போட்டியிடாவிட்டால் பன்னீர்செல்வம் அணி போட்டி என்று ஓபிஎஸ் அணி அறிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்த ஜேசிடி பிரபாகரன், வைத்திலிங்கம் தலைமையில் ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலுக்காக 118 பேர் கொண்ட பணிக்குழுவை அமைத்தார் பன்னீர்செல்வம். இந்த இடைத் தேர்தலில் பிஜேபி போட்டியிடுவதாக இருந்தால் முழு ஆதரவை கழகம் அவர்களுக்கு அளிக்கும் என்று அறிவித்திருக்கிறார்கள். அவர்கள் எப்போது அறிவித்தாலும் தேர்தல் பணியாற்றுவதற்கு தேர்தல் பணிக்குழுவை  இப்போது நியமித்துள்ளார்கள்.

பாஜக போட்டியிடவில்லை என வேறு முடிவு எடுத்தால் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் மாண்புமிகு அண்ணன் ஓபிஎஸ் அவர்கள் தனது வேட்பாளரை உறுதியாக அறிவிப்பாளர் அறிவிப்பார், வெற்றி பெறுவார்கள் என்று தெரிவித்தார்.