ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகின்ற 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த தேர்தலில் காங்கிரஸ், அதிமுக, தேமுதிக, நாம் தமிழர் கட்சி மற்றும் சுயேட்சைகள் உட்பட 77 பேர் போட்டியிடுகிறார்கள். இந்த தேர்தலை முன்னிட்டு 238 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப் பட்டுள்ளது. தேர்தல் அமைதியான முறையில் நடைபெறுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதாவது ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறுவதால் இன்று முதல் 3 நாட்களுக்கு அந்த பகுதியில் செயல்பட்டு வரும் 100-க்கும் மேற்பட்ட மது கடைகள் மூடப்படுவதாக அறிவித்துள்ளார். அதன்படி வருகிற திங்கள்கிழமை வரை மது கடைகள் அனைத்தும் மூடப்படுகிறது. இதேபோன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளான மார்ச் 2-ம் தேதியும் மது கடைகள் அனைத்தும் மூடப்படுகிறது. தேர்தல் அமைதியான முறையில் நடைபெற வேண்டும் என்ற நோக்கத்திற்காக மது கடைகள் அனைத்தும் மூடப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மேலும் அறிவிப்பை மீறி யாராவது மது விற்பனை செய்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கலெக்டர் எச்சரித்துள்ளார்.