தமிழ்நாடு தலைமைச் செயலாளர் இறையன்புவின் பதவிக்காலம் ஜூன் மாதத்தோடு நிறைவடைகிறது. இதனால் யார் அடுத்த தலைமைச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று எதிர்பார்ப்பு இருக்கிறது. அதோடு தற்போது தலைமைச் செயலாளராக இருக்கும் இறையன்புவுக்கு அடுத்ததாக எந்த பதவி வழங்கப்பட இருக்கிறது என்று எதிர்பார்ப்பும் இருக்கும் நிலையில் தற்போது புது தகவல் வெளிவந்துள்ளது. அதாவது மாநில தலைமை தகவல் ஆணையர் பதவி தான் இறையன்புவுக்கு வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. மாநில தகவல் ஆணையம் என்பது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் வழங்குவது அனைத்து துறை சார்ந்த தரவுகளை கணினி மயப்படுத்துவது போன்ற பணிகளை செய்து வருகிறது.

இந்நிலையில் மாநில தலைமை தகவல் ஆணையர் பணி என்பது தலைமை தேர்தல் அதிகாரி பணிக்கு சமமானது. அதன் பிறகு பிற தகவல் ஆணையர் பதவி என்பது தலைமைச் செயலாளர் பதவிக்கு இணையானது. மாநில தலைமை தகவல் ஆணையர் மற்றும் பிற தகவல் ஆணையர்களை தேர்ந்தெடுக்கும் பணி ஓய்வு பெற்ற நீதிபதி அக்பர் அலி தலைமையில் நடைபெற்ற நிலையில் அந்த குழு பட்டியலை தமிழக அரசிடம் சமர்ப்பித்துள்ளது. அந்த பட்டியலில் இறையன்புவின் பெயர் இடம் பெற்று இருப்பதாக கூறப்படும் நிலையில் இறுதி முடிவை தேர்வு குழு எடுக்கும்.

அதாவது மாநில தலைமை தகவல் ஆணையர் மற்றும் பிற தகவல் ஆணையர்களை முதல்வர் ஸ்டாலின், நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் அடங்கிய தேர்வு குழு நியமிக்கும். இந்த ஆணையர்களை தேர்வு செய்யும் பணி வருகிற மார்ச் 3-ஆம் தேதி நடைபெறும் நிலையில், ஆளுநர் ரவி அவர்களை  நியமிப்பார். மேலும் புதிய தலைமைச் செயலாளராக வேறொருவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று கூறப்படுகிறது.