ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தல் முடிவடைந்த பிறகு மார்ச் மாதம் 2-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அதன் பிறகு அதிமுக கட்சியில் எடப்பாடி தரப்பு வேட்பாளரான கே.எஸ் தென்னரசு போட்டியிடுகிறார்.‌ அதன் பிறகு நாம் தமிழர் கட்சி, தேமுதிக மற்றும் சுயேச்சைகள் பலரும் ஈரோடு கிழக்கில் போட்டியிடுகிறார்கள். ஈரோடு கிழக்கில் திமுக, தேமுதிக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக திமுக அமைச்சர்கள் அனைவரும் ஈரோடு கிழக்கில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்நிலையில் ஈரோட்டில் உள்ள கள்ளுக்கடை மேடு ஆலமரத்து தெருவில் அமைச்சர் பொன்முடி மற்றும் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ ஆகிய இருவரும் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தனர். அமைச்சர் பொன்முடி பிரச்சாரம் முடிந்து காரில் கிளம்பிய போது முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு இந்த பகுதியில் தான் பிரச்சாரம் மேற்கொண்டு இருக்கிறார் என அவரிடம் நிர்வாகிகள் கூறினார்கள். இதனையடுத்து அமைச்சர் பொன்முடி காரில் இருந்து இறங்கி செல்லூர் ராஜு பிரச்சாரம் செய்து கொண்டிருந்த வீட்டிற்கு சென்றார். அவரை செல்லுர் ராஜு புன்னகையுடன் வாங்க வாங்க என்று வரவேற்றார். இருவரும் சிறிது நேரம் நகைச்சுவையாக பேசிக்கொண்டனர்.

அதன் பிறகு அமைச்சர் பொன்முடி கைச்சின்னத்துக்கு வாக்களிக்குமாறு அவர்களிடம் கூற, செல்லூர் ராஜு உடனே என்னிடம் கேட்காதீர்கள் அவர்களிடம் கேளுங்கள் என்று நகைச்சுவையாக கூறினார். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் சிரிப்பலை நிகழ்ந்தது. மேலும் செல்லூர் ராஜு மற்றும் அமைச்சர் பொன்முடி ஜாலியாக பேசிய போது அங்கிருந்த நிர்வாகிகள் செல்போனை எடுத்து மாறி மாறி புகைப்படம் எடுத்து சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது வைரலாகி வருகிறது.