தமிழகத்தில் கைது செய்யப்படும் பெண்களை விசாரணைக்காக காவல் நிலையம் மற்றும் அவர்களின் வீடுகளை தவிர மற்ற இடங்களுக்கு அழைத்துச் செல்லக்கூடாது என்று போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு டிஜிபி சங்கர் ஜிவால் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளார். அதனைப் போலவே சூரியன் உதிக்கும் முன்பும் மறைவுக்குப் பிறகும் பெண்களை கைது செய்யக்கூடாது. பெண் போலீஸ் அதிகாரிகள் மட்டுமே கைது செய்ய வேண்டும்.

பெண்கள் மற்றும் சிறுமியரை கைது செய்ய நேர்ந்தால் விசாரணைக்காக காவல் நிலையம் மற்றும் அவர்களின் வீடுகளுக்கு அழைத்துச் செல்லலாம். பெண் போலீசார் பாதுகாப்பு அளிக்க வேண்டும். கைது செய்யப்படும் பெண்களை பெண் மருத்துவர்கள் மட்டுமே பரிசோதனை செய்ய வேண்டும். கர்ப்பிணியாக இருந்தால் கைது நடவடிக்கையை தவிர்க்க வேண்டும். கைதுக்கு காரணங்களை பெண்ணிடம் கட்டாயம் தெரிவிக்க வேண்டும். காவல் நிலையங்களில் பெண்களை நீண்ட நேரம் தங்க வைக்க கூடாது என்று உத்தரவிட்டுள்ளார்.