தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக அரிசி மற்றும் பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மக்களுக்கு மலிவு விலையில் வழங்கப்பட்டு வருகிறது. ரேஷன் கடைகளை கூட்டுறவு சங்கங்கள் நடத்தி வருகின்றன. ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள முதன்மை சங்கங்களின் கிடங்குகளுக்கு ரேஷன் பொருட்கள் அனுப்பப்படுகிறது. அங்கிருந்து வாகனங்களில் ஏற்றப்பட்டு அதன் பிறகு கடைகளுக்கு எடுத்து செல்லப்படும். அதேசமயம் வாணிபக் கழக கிடங்குகளில் இருந்து ரேஷன் கடைகளுக்கும் நேரடியாக பொருள்கள் அனுப்பப்படுகின்றன.

இந்த நிலையில் ரேஷன் பொருட்கள் பாதுகாப்பாக சென்றடைவதை உறுதி செய்வதற்காக அவற்றை ஏற்றி செல்லும் வாகனங்களில் ஜிபிஎஸ் என்ற வாகன நுகர்வு கண்காணிப்பு கருவிகள் பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதன்மை சங்கங்களுக்கு கூட்டுறவு துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த கருவி பொருத்துவதால் வாகனங்கள் அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தில் செல்வதை கண்காணிக்க முடியும் என்றும் வாகனங்கள் செல்லும் நேரமும் அறிய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அனுமதித்த நேரத்தை விட தாமதமானால் அதற்கான காரணம் கேட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் வாகனங்கள் கணக்கெடுக்கப்பட்டு ஜூன் மாதம் இறுதிக்குள் கருவிகள் பொருத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.