உலகில் மிகப் பெரிய ரயில்வே நெட்வொர்க்களில் ஒன்றாக இந்தியன் ரயில்வே உள்ளது. மக்கள் பலர் நெடுந்தூர பயணங்களுக்கு ரயில்களை அதிகளவு விரும்புகின்றனர். அதோடு ரயில்களில் ஜெனரல் கோச், ஸ்லீப்பர், 3rd AC, 2nd AC, 1st AC போன்ற வகைகளில் பெட்டிகள் இருக்கும். மக்களின் வசதிக்கு ஏற்றவாறு கோச்களில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம். இந்த நிலையில் ஜெனரல் கம்பார்ட்மென்ட்டில் முன்பதிவு செய்யாமல் பலர் பயணம் மேற்கொள்கின்றனர்.

இதனால் அவை சுத்தமாக இருக்காது. அதேபோன்று உணவு, தண்ணீர் பாட்டில் வாங்க சிரமம், ரயில் நின்றாலும் கடைக்கு நீண்டதூரம் நடக்க வேண்டும். இதன் காரணமாக ரயில்வே புது நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது. அந்த வகையில் பொது பெட்டியில் பயணம் செய்யும் பயணிகளுக்கு உணவு மற்றும் தண்ணீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

அதற்காக அனைத்து ரயில் நிலையங்களிலும் பொதுப்பெட்டிகள் அருகில் மலிவான உணவு, குடிநீர் மற்றும் விற்பனை தள்ளுவண்டிகளை அமைக்க அனைத்து மண்டல ரயில்வே பொது மேலாளர்களுக்கு ரயில்வே அறிவுறுத்தி உள்ளது. இதுதவிர ரயில் நிலையங்களில் குடிநீர் சாவடிகள் அமைக்கவும், வழியிலுள்ள நீர்நிலைகளில் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளின் கழிப்பறைகளில் தண்ணீர் வருவதற்கான முழுமையான ஏற்பாடுகளை செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.