
இந்திய குடிமக்கள் பரவலாக பயன்படுத்தும் ஆதார் அட்டை, பான் கார்டு மற்றும் ரேஷன் கார்டுகள் போன்ற அடையாள ஆவணங்கள், இந்திய குடியுரிமையை நிரூபிக்கும் அதிகாரப்பூர்வ ஆவணங்கள் அல்ல என்று மத்திய அரசு தெளிவாக அறிவித்துள்ளது. குடியுரிமை தொடர்பான குழப்பங்களைத் தீர்க்கும் வகையில், பிறப்புச் சான்றிதழ் மற்றும் இருப்பிடச் சான்றிதழ் (Domicile Certificate) மட்டுமே இந்திய குடியுரிமையை உறுதிப்படுத்தும் முதன்மையான ஆவணங்களாக ஏற்றுக்கொள்ளப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது. சமீப காலங்களில், சில சட்டவிரோத குடியேறிகள், ஆதார் அல்லது பான் போன்ற ஆவணங்களை பயன்படுத்தி குடியுரிமை உரிமைகளை கோரியதைத் தொடர்ந்து, இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ஆதார் அட்டை தனித்துவ அடையாளமாக மட்டுமே பயன்படுத்தப்படுவதால், இது இந்தியாவில் பிறந்தோ அல்லது குடிமகனாக இருந்தோ கிடைக்கும் உரிமை அல்ல. அதேபோல், பான் கார்டு வருமான வரி தொடர்பான நிதி பரிவர்த்தனைகளுக்காக மட்டுமே உள்ளது. ரேஷன் கார்டும் பொதுவான உணவுப் பொருட்கள் மற்றும் நலத்திட்டங்களைப் பெற பயன்படுத்தப்படும் ஆவணமாகவே இருக்கிறது. எனவே, இவை மூன்றும் குடியுரிமையை உறுதிப்படுத்தும் ஆவணங்களாக சட்டரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட முடியாது என்பதை மத்திய அரசு மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியுள்ளது.
மாற்றாக, 1969 பிறப்புச் சான்றிதழ் சட்டத்தின் கீழ் வழங்கப்படும் பிறப்புச் சான்றிதழும், மாநில அரசுகளால் வழங்கப்படும் இருப்பிடச் சான்றிதழும் மட்டுமே இந்திய குடியுரிமையை நிரூபிக்கும் அதிகாரப்பூர்வ ஆவணங்களாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு, அரசு வேலைவாய்ப்பு, பாஸ்போர்ட் விண்ணப்பம், வாக்காளர் அட்டை பதிவு மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகள் போன்ற முக்கிய சந்தர்ப்பங்களில் குடியுரிமை உறுதிப்படுத்த வேண்டிய தேவைகளில் வழிகாட்டியாக இருக்கும். எனவே, குடியுரிமை தொடர்பான சிக்கல்களைத் தவிர்க்க, அனைவரும் உரிய ஆவணங்களை சரியான முறையில் பெற்றுக் கொள்ளும் அவசியம் இருப்பதாக மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.