எடப்பாடி பழனிச்சாமி அ.தி.மு.க உட்கட்சி மோதலில் ஒரு வழியாக இரட்டை இலை சின்னத்தை தனது அணிக்கு பெற்றுவிட்டார். பா.ஜ.கவை முன்னிறுத்தி ஓ.பி.எஸ் மேற்கொண்ட முயற்சிகள் எதுவும் பலனளிக்காத நிலையில் தற்போது பா.ஜ.க.வே எடப்பாடியின் கையை பிடித்து ஆதரவு தெரிவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அ.தி.மு.க-வில் இரட்டை தலைமை செயல் பட்டு வந்த நிலையிலும் அவ்வபோது உள்ளுக்குள் எழுந்த கழகங்களிலும் எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாகவே முடிவுகள் அமைந்தது. இதற்கு முதல்வர் வேட்பாளர் விவகாரம், எதிர்க்கட்சித் தலைவர் விவகாரம் போன்றவற்றை உதாரணமாக கூறலாம்.

இந்நிலையில் ஒற்றை தலைமை விவகாரம் எழுந்தபோது ஓ.பி.எஸ்-ஐ கட்சியிலிருந்து நீக்கும்  முடிவு வரை சென்றுள்ளது. ஆளுக்கு ஒரு திசையில் பிரிந்து நின்று வெளிப்படையாகவே ஒருவருக்கு  எதிராக மற்றவர் வார்த்தைகளை அள்ளி வீசி வரும் நிலையில் தற்போதும் எடப்பாடி பழனிசாமி கையே ஓங்கி உள்ளது. இந்த இடைத்தேர்தலில் இரட்டை இலைக்காக தன்னிடம் இறங்கி வருவார்கள் என ஓ.பி.எஸ் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். ஆனால் எடப்பாடி பழனிச்சாமி விடாப்பிடியாக நின்று பாஜகவையும் தங்கள் பக்கம் இழுத்துள்ளார்.

தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி அ.தி.மு.க தலைமையிலான கூட்டணி என்று கூட்டணிக்கு புதிய பெயர்கள் வைத்து பா.ஜ.க-விற்கு எடப்பாடி பழனிசாமி தனது எதிர்ப்பை காட்டியுள்ளார். பின்னர் டெல்லி அவசர அவசரமாக எடப்பாடி பக்கம் வந்தது. பா.ஜ.க தனக்கு ஆதரவளித்தால் மக்களவைத் தேர்தலில் அவர்களுடன் தான் கூட்டணி என்று அறிவிப்பையும் நேற்று நெல்லையில் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார். அதேபோல் அ.தி.மு.க தொண்டர்கள் நிர்வாகிகள் ஆதரவை பெருமளவில் இருந்த ஓ.பி.எஸ் பா.ஜ.க-வை வைத்து அரசியல் பயணத்தை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் மக்களவையில் பா.ஜ.க-வுடன் கூட்டணி என நேற்று இ.பி.எஸ் அறிவித்ததால் ஓ.பி.எஸ் தரப்பு அதிர்ச்சி அடைந்துள்ளது. பா.ஜ.க-வும் தன்னை கைவிட்டால் என்ன செய்வது என யோசிக்க தொடங்கிய ஓ.பி.எஸ் அடுத்த கட்ட நகர்வு பற்றி ஆலோசனை செய்து வருகின்றாராம். அதாவது முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்த பிரமுகர்கள் சமீபத்தில் ஓ.பி.எஸ்-ஐ சந்தித்து பேசியதாக தெரிவிக்கின்றனர். அதன்படி சசிகலா டி.டி.வி தினகரன் ஆகியோருடன் இணைந்து செயல்படுங்கள்.

அப்போதுதான் எடப்பாடி பழனிச்சாமி அதிர்ச்சி அடையும் விதமாக தாக்கத்தை ஏற்படுத்த முடியும். இனியும் தனித்தனியாக நின்றால் வெற்றி எடப்பாடிக்கு தான் என தெரிவித்துள்ளார். ஆரம்பத்திலேயே ஓ.பி.எஸ் இருவரையும் சந்திப்பேன் எனக் கூறியிருந்தாலும் தொடர்ந்து  தயக்கம் காட்டி வந்தார். இந்நிலையில் பா.ஜ.க வரை இ.பி.எஸ் பக்கம் சென்று விட்டால் இனி காத்திருந்து பிரயோஜனம் இல்லை என யோசிக்க  தொடங்கி இருக்கிறாராம். அதேபோல் ஈரோடு இடைத்தேர்தல் முடிந்த பின் சசிகலாவையும் அவரை தொடர்ந்து தினகரனையும் ஓ.பி.எஸ் தேடி சென்று சந்திக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கின்றனர்.