டெல்லியை சேர்ந்த கணேஷ் என்பவர் புதுச்சேரியில் உள்ள கடற்கரை சாலையில் கடந்த 15 வருடங்களாக கடற்கரைக்கு வரும் மக்களை நம்பி வியாபாரம் செய்து வருகிறார். இவருடைய கடைக்கு லாஸ்பேட்டை பகுதியைச் சேர்ந்த பவித்ரா என்ற பெண் அடிக்கடி பொருள் வாங்க வந்துள்ளார். அப்போது கணேஷ் மற்றும் பவித்ரா இருவரும் காதலிக்க தொடங்கிய நிலையில் கடந்த வருடம் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் பவித்ரா தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் நிலையில், கணேஷ் மற்றும் பவித்ரா இருவரும் மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பதாலும், வறுமையில் வாழ்கிறார்கள் என்பதாலும் கடற்கரையில் வியாபாரம் செய்யும் சக வியாபாரிகள் பவித்ராவுக்கு வளைகாப்பு நடத்தியுள்ளனர்.

இந்த வளைகாப்பு நிகழ்ச்சியில் ஒரு கர்ப்பிணி பெண்ணுக்கு என்னென்ன சீர்வரிசை கொடுக்க வேண்டுமோ அத்தனை விதமான சீர்வரிசையையும் சக வியாபாரிகள் கொடுத்ததோடு 9 வகையான சாதங்களும் பவித்ராவுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இதேபோன்று கர்ப்பிணி பெண்ணுக்கும் வளைகாப்பின் போது ஆரத்தி எடுத்த பெண்களுக்கும் தாம்பூழ தட்டில் சீர்வரிசை வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த கர்ப்பிணி பெண்ணுக்கு சாலையோர வியாபாரிகள் சிறப்பான முறையில் வளைகாப்பு நடத்தியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.