இந்திய சீனியர் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருக்கும் ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் அடுத்த மாதம் நடைபெறும் டி20 உலக கோப்பையுடன் முடிவு பெறுகிறது. இதனால் அடுத்த தலைமை பயிற்சியாளரை தேர்வு செய்யும் முனைப்பில் பிசிசிஐ ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பணிக்கு தன்னை அணுகியதாக ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். ஆனால் அந்த வாய்ப்பை தான் நிராகரித்து விட்டதாகவும் அவர் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, நான் தேசிய அணியின் பயிற்சியாளராக இருக்க விரும்புவதோடு ஆஸ்திரேலியாவில் என்னுடைய வாழ்க்கையின் கூடுதல் நேரத்தை செலவிட விரும்புகிறேன்.

இந்திய அணியின் பயிற்சியாளராக பொறுப்பேற்றால் ஐபிஎல் தொடரில் விளையாட முடியாது என்பது அனைவருக்கும் நிச்சயம் தெரியும். எனவே தலைமை பயிற்சியாளராக இருக்க விரும்பினால் ஐபிஎல் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலக வேண்டும். தலைமை பயிற்சியாளர் என்பது வருடத்தில் 10 முதல் 11 மாத வேலையாகும். இப்போது என்னுடைய வாழ்க்கை முறைக்கும் நான் ரசிக்கும் விஷயங்களுக்கும் எனக்கு தலைமை பயிற்சியாளர் பதவி சரிப்பட்டு வராது என்பதால் நிராகரித்துவிட்டேன் என்று கூறியுள்ளார். மேலும் வருடத்திற்கு 10 மாதங்களுக்கு மேல் இந்தியாவில் இருக்க வேண்டும் என்பதால் அந்த பதவி தனக்கு சரிப்பட்டு வராது என அவர் கூறியுள்ளார்.