அனைத்து அணிகளையும் சமமாக பார்க்க வேண்டும் என்று இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் கருத்து தெரிவித்துள்ளார்.

ஆசிய கோப்பை 2023 போட்டி பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக பாகிஸ்தானில் அனைத்து போட்டிகளும் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது போட்டிகள் இலங்கையில் நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக லீக் போட்டிகள் நடந்து முடிந்த நிலையில், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் வங்கதேசம் ஆகிய அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இதனிடையே இலங்கையில் மழை குறுக்கிட்டதால் போட்டிகளில் பாதிப்பு ஏற்பட்டது.

குறிப்பாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான லீக் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. அதேபோல இந்தியா – நேபாளம் போட்டியும் மழையால் தடைபட்டது. எனவே, நேபாளம் கொடுத்த இலக்கை 23 ஓவர்களில் முடிக்க இந்தியாவுக்கு சவாலாக இருந்தது. அடுத்ததாக சூப்பர் 4 சுற்றில் இந்தியா – பாகிஸ்தான் ஆகிய இரு அணிகளும் மீண்டும் ஒருமுறை மோதுகின்றன. இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி செப்டம்பர் 10ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தப் போட்டி இலங்கையின் கொழும்புவில் உள்ள பிரேமதாசா மைதானத்தில் நடைபெறவுள்ளது. ஆனால் இந்த போட்டியிலும் மழை நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. எனவே ஆசிய கிரிக்கெட் கவுன்சில் ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது.

ஆசிய கிரிக்கெட் கவுன்சில் இந்த முடிவை எடுத்துள்ளது :

இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டி செப்டம்பர் 10ஆம் தேதி நடைபெறும் நிலையில், மழை குறுக்கிட்டால் மறுநாள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், செப்டம்பர் 17-ம் தேதி இறுதிப் போட்டிக்கு ஒரு நாள் ஒதுக்கப்பட்டுள்ளது. திட்டமிட்ட நாளிலேயே போட்டியை முடிக்க முயற்சி மேற்கொள்ளப்படும். ஆனால் மழை காரணமாக போட்டியை பாதியில் நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டால், ரிசர்வ் நாளில் (செப்டம்பர் 11ஆம் தேதி) ஆட்டம் நிறுத்தப்பட்ட இடத்திலிருந்து போட்டி தொடங்கும். இந்த அறிவிப்பு ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆனாலும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டிக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து ரிசர்வ் டே வழங்கப்பட்டது குறித்து விமர்சனமும் எழுகிறது. இந்நிலையில் அனைத்து அணிகளையும் சமமாக பார்க்க வேண்டும் என்று இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் கருத்து தெரிவித்துள்ளார். இந்தியா – பாகிஸ்தான் போட்டிக்கு மட்டும் ரிசர்வ் டே தந்து விட்டு பிற போட்டிகளுக்கு தராமல் இருப்பதை ஏற்க இயலாது, அனைத்து அணியினரையும் சமமாக பார்க்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்..

ஆசிய கோப்பை 2023 : சூப்பர் ஃபோர் அட்டவணை :

செப் 06 : பாகிஸ்தான் vs வங்கதேசம் , லாகூர்

செப் 09 : இலங்கை vs வங்கதேசம் , கொழும்பு

செப் 10 : பாகிஸ்தான் vs இந்தியா, கொழும்பு

செப் 12 : இந்தியா vs இலங்கை , கொழும்பு

செப் 14 : பாகிஸ்தான் vs இலங்கை, கொழும்பு

செப் 15 : இந்தியா vs வங்கதேசம், கொழும்பு

செப் 17 : இறுதி, கொழும்பு