இந்தியாவில் சிம் கார்டு வாங்குவதற்கும் விற்பதற்கும் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட உள்ளன. நாட்டில் இணைய குற்றங்களை தடுக்கும் நோக்கில் மத்திய அரசு புதிய விதிமுறைகளை கொண்டு வருகிறது. இது டிசம்பர் 1ஆம் தேதி அதாவது நாளை முதல் அமலுக்கு வருகிறது. இந்த தேதியிலிருந்து சிம்கார்டு வாங்குவதற்கும் விற்பதற்கும் புதிய விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. மத்திய அரசின் புதிய முடிவு போல சிம் கார்டுகள் மூலம் நடக்கும் மோசடிகளை தடுக்க உதவும் எனக் கூறப்படுகிறது. அதன்படி டிசம்பர் 1 முதல் அனைத்து சிம் கார்டு விற்பனையாளர்களுக்கும் போலீஸ் சரிபார்ப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சிம் விற்பனைக்கு தேவையான பதிவுக்கு போலீஸ் சரிபார்ப்பு தேவை.

இது போன்ற விதிமுறைகளை மீறும் வியாபாரிகளுக்கு 10 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் மொத்தமாக சிம் கார்டுகளை வாங்குவதற்கு தடை செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் வணிக இணைப்புகள் மூலமாக மட்டுமே சிம் கார்டுகளை மொத்தமாக வாங்க முடியும். பயனர்கள் முன்பு போலவே ஒரு ஆவணம் மூலமாக ஒன்பது சிம் கார்டுகள் வரை பெறலாம். சிம் கார்டுகளை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ஆதார் ஸ்கேன் மற்றும் ஆவண தரவு சேகரிப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பழைய சிம் கார்டு தொலைந்துவிட்டால் சிம் கார்டை செயலிழக்க செய்த 90 நாட்களுக்கு பிறகு தான் அந்த எண்ணை நீங்கள் திரும்பப் பெற முடியும்.