மகளிருக்கான ஆயிரம் ரூபாய் திட்டத்தில் இடைத்தரகர்கள் யாரையும் மக்கள் நம்ப வேண்டாம் என்று கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தை கடலூர் மாவட்டத்தில் சிறப்பாக செயல்படுத்தி வருகிறோம். இங்குள்ள மொத்தம் 1416 ரேஷன் கடைகளில் இரண்டு கட்டமாக இந்த பதிவு முகாம் நடைபெறுகிறது. முதல் விண்ணப்ப பதிவு 24ம் தேதி தொடங்கி அடுத்த மாதம் ஆகஸ்ட் 4வது தேதி வரையிலும், இரண்டாம் விண்ணப்ப பதிவு ஐந்தாம் தேதி தொடங்கி 16 ஆம் தேதி வரையிலும் நடக்கிறது.

வீட்டு உரிமையாளர்களிடம் கையொப்பம் பெற்றுக் கொள்ளப்பட்டு குறித்து தேதியில் மட்டும் முகாமுக்கு செல்ல வேண்டும். இதனை கண்காணிப்பதற்கு மாவட்ட, மண்டல, வட்டார அளவில் குழு நியமிக்கப்பட்டுள்ளது. நடமாடும் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. இது மக்களுக்கான திட்டம் என்பதனால் எந்த ஒரு தனி  மனிதரையும் யாரும் நம்ப வேண்டாம். குறிப்பாக இடைத்தரகர்களை நம்ப வேண்டாம். விண்ணப்பதாரரே நேரடியாக சென்று விண்ணப்பித்தால் போதும். மாற்று திறனாளிகள், முகாமிற்கு வர முடியாதவர்கள் அவர்களுடைய வீட்டிற்கு சென்று அலுவலர்கள் விண்ணப்பங்களை பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.