
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், மக்கள் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. இதனை கருத்தில் கொண்டு, நடிகர் கமல்ஹாசன், தனது எதிர்பார்ப்பு மிகுந்த திரைப்படமான ‘தக் லைஃப்’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை ஒத்திவைக்கும் முடிவை எடுத்துள்ளார்.
மே 16ஆம் தேதி திட்டமிடப்பட்டிருந்த விழா, தற்போதைக்கு ரத்து செய்யப்பட்டு, புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும் என ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
View this post on Instagram
“கலை காத்திருக்கலாம். இந்தியாதான் முதலில் வரவேண்டும்” என்ற தலைப்பில் வெளியான அறிக்கையில், நாட்டின் எல்லைகளில் ஏற்பட்டுள்ள உச்சக்கட்ட எச்சரிக்கையை குறிப்பிட்டு, இது போன்ற நேரங்களில் நாட்டின் பாதுகாப்பு முன்னிலையாக இருக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
“இது கொண்டாட்ட நேரமல்ல, ஒற்றுமையைக் கடைப்பிடிக்க வேண்டிய நேரம். நம் ஆயுதப்படைகள் நம்மைக் காக்கத் தன்னலமின்றி பணியாற்றும் நேரத்தில், நாமும் பொறுப்புடன் செயல்பட வேண்டும்” என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
ஜூன் 5, 2025 அன்று இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், தற்போது ஏற்பட்ட சூழ்நிலை காரணமாக புதிய விழா தேதிக்கு ரசிகர்கள் காத்திருக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.