சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ சிதம்பரம் ஸ்டேடியத்தில் ஐபிஎல் 3-வது லீக் ஆட்டம் நடைபெற்றது. அந்த ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்-மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிக்கொண்டது. அதில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தது. மும்பை அணி 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட் 155  ரன்கள் சேர்த்தது. அதில் அதிகபட்சமாக திலக் 31 ரன்கள் அடித்தார்.

இதனையடுத்து 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது. 19.1 ஓவர்களின் 6 விக்கெட்டுக்கு 158 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ரச்சின் ரவீந்திர 65 ரன்கள் அடித்தார். இந்த நிலையில் சென்னை அணியின் வீரர்களான கேப்டன் ருத்துராஜ், வேக பந்துவீச்சாளர் கலீல் அகமது ஆகியோர் பந்தை சேதப்படுத்தியதாக சர்ச்சை வீடியோ வைரலாகி வருகிறது.

கலீல் அகமது பந்து வீச தயாராகும் முன்பு தனது பாக்கெட்டில் இருந்து ஏதோ ஒன்றை எடுத்து ருத்துராஜ் கையில் கொடுப்பது போலவும், அதனை ருத்துராக் தனது பாக்கெட்டில் மறைத்து வைப்பது போலவும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. அது என்ன பொருள் என்பது தெளிவாக தெரியவில்லை. சில ரசிகர்கள் சென்னை அணியினர் பந்தை சேதப்படுத்தியுள்ளனர் என விமர்சனம் செய்து வருகின்றனர். மேலும் இதுகுறித்து பிசிசிஐ விசாரணை நடத்த வேண்டும் என கூறி வருகின்றனர். வீசியது புதிய பந்து தான். அதனை சேதப்படுத்தியும் எந்த பலனும் இல்லை. அது நல்ல கிருப்புடன் இருக்கும். சென்னை அணி வீரர்கள் பந்தை சேதப்படுத்தவில்லை என ஒரு தரப்பு ரசிகர்கள் ஆதரவாக பேசி வருகின்றனர்.