கேரள மாநிலம் திருச்சூர் புரம் பகுதியில் பிரதீஷ் (48) என்பவர் ஹோட்டல் நடத்தி வந்துள்ளார். இவர் கல்லீரல் புற்று நோயால் அவதிப்பட்டு வந்த நிலையில் உடல் நலம் மிகவும் மோசமாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவருக்கு உடனடியாக கல்லீரல் அறுவை மாற்று சிகிச்சை செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டபோது அவருக்கு உறுப்பு தானம் கிடைக்காததால் அவருடைய 17 வயது மகள் தேவானந்தா தன்னுடைய தந்தைக்காக கல்லீரலை தானம் செய்ய முன் வந்துள்ளார். ஆனால் 18 வயது நிரம்பியவர்கள் மட்டுமே கல்லீரல் தானம் செய்ய முடியும் என்பதால் தேவானந்தா கல்லீரல் தானம் செய்வதில் சட்ட சிக்கல் ஏற்பட்டது.

இது தொடர்பாக தேவானந்தா கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த நிலையில் குடும்பத்தின் வறுமை மற்றும் பிரதீஷ் உடல் நலம் போன்றவற்றை கருத்தில் கொண்டு தேவானந்தா கல்லீரல் தானம் செய்ய நீதிமன்றம் அனுமதி கொடுத்தது. அதன் பிறகு தேவானந்தாவுக்கு பரிசோதனை செய்ததில் அவருடைய கல்லீரலில் கொழுப்பு இருப்பது தெரிய வந்தது.

இதன் காரணமாக ஒரு மாத காலமாக தன்னுடைய உணவு பழக்க வழக்கங்களை மாற்றியதோடு கடுமையான உடற்பயிற்சி போன்றவைகளை மேற்கொண்டு தேவானந்தா தன்னுடைய கல்லீரலில் இருந்த கொழுப்புகளை முழுமையாக நீக்கினார். அதன் பிறகு தந்தைக்கு கல்லீரல் அறுவை மாற்று சிகிச்சை செய்யப்பட்ட நிலையில் தற்போது தந்தை மகள் நலமாக இருக்கிறார்கள். இந்நிலையில் இந்தியாவிலேயே மிக குறைந்த வயதில் உறுப்பு தானம் செய்தவர் என்ற பெருமை தற்போது தேவானந்தாவுக்கு கிடைத்துள்ளது. மேலும் தேவானந்தாவின் செயலை பார்த்து மருத்துவமனை நிர்வாகம் அறுவை சிகிச்சைக்கு ஆகும் செலவை முற்றிலுமாக தள்ளுபடி செய்துள்ளது.