தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும் நேற்று ஒரே கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் நடந்து முடிந்தது. இதில் 74 சதவீதத்திற்கும் மேலான வாக்குகள் பதிவாகின. இது ஒருபுறம் இருக்க இதற்கு முன் நடைபெற்ற எந்த தேர்தல்களிலும் இல்லாத அளவில் இந்த முறை யாருக்கு வாக்களிக்கும் என்பதை பலரும் பகிரங்கமாக கூறியவர்களை நம்மால் பார்க்க முடிகிறது. இது தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு முற்றிலும் முரணானது என்று தெரியாமல் சிலர் பெருமையாக நினைத்துக் கொண்டு இது போல வீடியோக்கள் பதிவிட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தை அடுத்த பக்ரிமானியம் கிராமத்தைச் சேர்ந்தவர் கோமதி. இவர் வாக்களித்து முடித்த நிலையில் வாக்குச்சாவடி முதல் கடை தெரு வரை நான் இந்த கட்சிக்கு தான் வாக்களித்தேன் என்று பகிரங்கமாக கூறியபடி இருந்துள்ளார். இது மற்ற கட்சியினருக்கு கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதனை அடுத்து அதே ஊரை சேர்ந்த அருள் ரவி, ராஜா , அறிவு மணி ,பாண்டியன், கலைமணி ஆகியோர் கோமதி வீட்டுக்கு சென்று ஏன் எங்களுடைய கட்சிக்கு வாக்களிக்காமல் அந்த கட்சிக்கு வாக்களித்தாய் என்று கேட்டனர். இதில் சண்டை ஏற்பட்டதில் ஒரு கட்டத்தில் ஏழு பேரும் சேர்ந்து அங்கிருந்த கம்பியை கொண்டு கோமதியை தாக்கி உள்ளனர். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் . இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகிறார்கள்.