இங்கிலாந்தில் புதிய விசா கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட இருக்கிறது. அதன்படி அந்நாட்டில் கல்வி பயிலும் பிற நாட்டு மாணவர்கள் தங்களது மாணவர்கள் விசா மூலம் குடும்பத்தினரை அழைத்துச் செல்ல முடியாது என இங்கிலாந்து அரசு அறிவித்துள்ளது.

மாணவர்கள் விசாவை பயன்படுத்தி வேறு சில காரணங்களுக்காக பலர் நுழைவதை வாடிக்கையாக வைத்திருப்பதால் இதனை தடுக்கும் பொருட்டு இந்த புதிய கட்டுப்பாடு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

இந்த மாதம் முதல் அமலுக்கு வரும் இந்த கட்டுப்பாட்டின் மூலம் ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேரின் வருகை இங்கிலாந்துக்கு குறையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஆனால் அரசு உதவி பெறும் மாணவர்களுக்கும் முதுகலை ஆராய்ச்சி மாணவர்களுக்கும் இந்த கட்டுப்பாடுகள் கிடையாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.