தமிழக டிஜிபியாக பணிபுரிந்த சைலேந்திரபாபு கடந்த ஜூன் 30ம் தேதி ஓய்வு பெற்ற நிலையில் புதிய டிஜிபியாக சங்கர் ஜிவால் பணி நியமனம் செய்யப்பட்டார். சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக இருந்த இவர் ஆவடி கமிஷனர் ஆக நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வரும் நிலையில் புதிதாக பொறுப்பேற்றுள்ள டிஜிபி சங்கர் ஜிவால், ஏடிஜிபி அருண் ஆகியோர் தொடக்கத்திலிருந்து அதிரடி காட்ட தொடங்கியுள்ளார்கள். அதாவது தமிழகம் முழுவதும் உள்ள காவல் கமிஷனர்கள், மண்டல ஐஜிக்கல், சரக டிஐஜி களுக்கு, எஸ்பிகளுக்கு சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளனர்.

அதன்படி இன்ஸ்பெக்டர்கள் ஒரு நாள் விட்டு ஒரு நாள் இரவு பணிகளை கவனிக்க வேண்டும். ரவுடி பட்டியலில் உள்ளவர்கள் ஜாமினில் வெளியே வந்தால் அவர்களை கைது செய்ய வேண்டும். அவர்களை கண்காணிக்க வேண்டும். உதவி கமிஷனராக உள்ளவர்கள் பகல் நேர பணியோடு நள்ளிரவு 2 மணி வரை பணிபுரிய வேண்டும். பகல் மற்றும் இரவு நேரங்களில் கண்டிப்பாக வாகன ரோந்து நடத்த வேண்டும்.

அப்போது குற்றப் பட்டியலில் உள்ளவர்களை கைது செய்ய வேண்டும். குடிபோதையில் வாகனம் ஓட்டினால் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும். லாட்ஜ், ஹோட்டல்களில் சரியான சோதனை நடத்தி, சரியான முகவரியை கொடுத்து தங்கினார்களா? என்பதை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். டாஸ்மாக் கடைகள் இரவு 10 மணிக்கு மேல் திறந்து இருக்க கூடாது. காலையில் 12 மணிக்கு முன் திறக்க கூடாது. இதனை கண்காணிக்க வேண்டும் மீறினால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.