அதிமுக முன்னாள் அமைச்சரும், மூத்த தலைவருமான சி.வி. சண்முகம், கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் திருமாவளவன் குறித்த அரசியல் நகர்வுகள் தொடர்பாகச் சட்டசபைக்கு வெளியே செய்தியாளர்களிடம் ஆவேசமாக கருத்து தெரிவித்துள்ளார். அதிமுகவின் தொடர் தோல்விகள் குறித்துப் பேசிய சி.வி. சண்முகம், வெற்றி பெற்றால் எடப்பாடி பழனிசாமி காரணம், தோற்றால் மாவட்டச் செயலாளர்கள் காரணமா? வலுவான தலைவர் வேண்டும் என்றுதான் எடப்பாடி பழனிசாமியைத் தேர்வு செய்தோம். ஆனால், அவரால் இதுவரை ஒரு தேர்தலிலும் வெற்றி பெற முடியவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை முதலமைச்சராக்குவது குறித்த பேச்சுக்கு விளக்கம் அளித்து அவர்  பேசியதாவது, “திருமாவளவனை முதலமைச்சர் ஆக்க வேண்டும் என்று நான் சொன்னதாகச் சொல்கிறார்கள். ஆமாம், சொன்னேன்! ஆனால் எந்தச் சூழலில் சொன்னேன்? திமுக ஆதரவோடு ஆட்சி அமைக்க ஒப்புக் கொடுத்துள்ளதாகவும், ஆனால் ‘திருமாவளவன் முதலமைச்சராக இருக்கட்டும்; மற்ற அமைச்சர் பதவிகளை எல்லாம் நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள்’ என்று நிபந்தனை விதித்ததாகவும் கூறினார்கள்.

அப்போதுதான் நான், ‘திருமா முதலமைச்சராகட்டும்; திமுக ஆதரவோடு நீங்கள் ஆட்சி அமைப்பதில் தப்பில்லை. திருமா முதலமைச்சர் ஆகட்டும் என்று சொன்னால் தப்பா?’ எனக் கேட்டேன்” என்று விளக்கமளித்தார்.

மேலும் அதிமுகவின் தொடர் தோல்விகள் மற்றும் எடப்பாடி பழனிசாமியின் தலைமை குறித்த சி.வி. சண்முகத்தின் இந்த அதிரடி விமர்சனமும், திருமாவளவன் தொடர்பான அவரது கருத்துகளும் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.