
சிந்தூர் நடவடிக்கையின் போது பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்கள் மற்றும் கப்பல் ஏவுகணைகளை வெற்றிகரமாக செயலிழக்கச் செய்த இந்தியாவின் S-400 வான் பாதுகாப்பு அமைப்பின் செயல்திறன், உலகத்தையே அதிர வைத்தது.
இதைத் தொடர்ந்து, இந்தியா தற்போது ரஷ்யாவிடம் இருந்து கூடுதல் S-400 ஏவுகணைகள் மற்றும் பேட்டரிகளை விரைவில் பெறுவதற்கான கோரிக்கையை எழுப்பியுள்ளது. இந்தியாவின் கோரிக்கையை ரஷ்யா ஏற்று கொண்டது.
குறிப்பாக எல்லைப் பகுதிகளில், பாகிஸ்தானின் ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை முறியடிக்க இந்தியா தனது வான் பாதுகாப்புத் திறன்களை வலுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. S-400 என்பது நான்கு விதமான வான் ஏவுகணைகளை ஒரே அமைப்பில் கொண்டுள்ள, உலகின் மிக மேம்பட்ட பல்துறை ஏவுகணை பாதுகாப்பு அமைப்பாகும்.
இது ஸ்டெல்த் போர் விமானங்கள், க்ரூஸ் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைகள், ட்ரோன்களை மிகுந்த துல்லியத்துடன் அழிக்கக்கூடியது. அதன் ரேடார் தொழில்நுட்பம் ஒரே நேரத்தில் 300 இலக்குகளைக் கண்காணித்து, 36 இலக்குகளை குறிவைக்க முடியும். இது 600 கிமீ தூரம் வரை கண்காணிக்கும் திறன் கொண்டது.
முக்கியமாக, வெறும் 5 நிமிடங்களில் போருக்குத் தயாராகும் இந்த அமைப்பு, அனைத்து பிரிவுகளும் மொபைலாக இருப்பதால் எங்கு வேண்டுமானாலும் உடனடியாக பயன்படுத்தலாம். ஒவ்வொரு படைப்பிரிவும் 128 ஏவுகணைகளை ஏற்றக்கூடிய திறனுடையது. நிலம், வான், கடற்படை கட்டளை மையங்களுடன் இணைந்த ஒட்டுமொத்த கட்டளை அமைப்பைக் கொண்டது சிறப்பம்சமாகும்.