
தமிழகத்தில் சென்னை அசோக் நகர் பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் மகாவிஷ்ணு என்பவர் ஆன்மீக சொற்பொழிவு நடத்தியது மிகப்பெரிய சர்ச்சையாக மாறிய நிலையில் பள்ளி கல்வித்துறை விசாரணை நடத்தி வருகிறது. அதன் பிறகு இந்த ஆன்மீக சொற்பொழிவு நடத்திய நபர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் வலியுறுத்தி வருகிறார்கள். இதைத்தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் ஒரு முக்கிய உத்தரவினை பிறப்பித்தார். அந்த உத்தரவின் படி இனி பள்ளிகளில் அனுமதி இன்றி நிகழ்ச்சிகள் நடத்தக்கூடாது என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டது.
இந்நிலையில் பாமக கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மாணவர்களின் சிந்தனையை மழுங்கடித்த அந்த நபர் மீது உடனடியாக தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அசோக் நகர் பள்ளியில் நடந்த நிகழ்வுகளுக்கு காரணமென கூறி சில ஆசிரியர்கள் மீது மட்டும் நடவடிக்கை எடுத்துவிட்டு சிக்கலை மூடி மறைக்கக் கூடாது. இதற்கு காரணமானவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இந்த சம்பவத்திற்கு காரணமானவர்கள் எத்தகைய உயர் பொறுப்பில் இருந்தாலும் அவர்கள் மீது கண்டிப்பாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.