தாட்கோ நிர்வாக இயக்குனர் க.சு.கந்தசாமி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு ட்ரோன் கருவி  பயிற்சி வழங்கப்பட உள்ளதாக கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகள் வழங்கப்படுகிறது. அந்த வகையில் விவசாயத் துறையில் பயன்படுத்தும் ட்ரோன் கருவி பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது.

இந்த பயிற்சியின் மூலமாக ஒரு நாளைக்கு 10,000 ரூபாய் முதல் 15 ஆயிரம் ரூபாய் வரை சம்பாதிக்கலாம். இதன் முக்கிய நோக்கம் என்னவென்றால் விவசாய பணியாளர்கள் பற்றாக்குறை உள்ள கிராமங்களில் இதனை பயன்படுத்துவதாகும். இதற்கான பயிற்சிகள் பத்து நாட்கள் நடைபெறுகிறது. மேலும் பயிற்சிக்கான தொகை தாட்கோ நிறுவனத்தால் வழங்கப்படுகிறது. இதில் உணவு மற்றும் தங்கும் இடம் போன்றவை இலவசம். இந்நிலையில் பயிற்சியின் முடிவில் 10 ஆண்டுகள் செல்லத்தக்க வகையிலான அங்கீகரிக்கப்பட்ட ட்ரோன் ரிமோட் பைலட் உரிமம் வழங்கப்படுகிறது.

இதில் பயிற்சி பெற்றவர்கள் சொந்தமாகவோ அல்லது தாட்கோ நிதி உதவி மூலமாகவோ ட்ரோன் கருவிகளை வாங்கிக் கொள்ளலாம். இந்த ட்ரோன்கள் வாங்குவதற்கு வேளாண்மை துறையில் உள்ள மானியம் மற்றும் கடன் திட்டங்கள் மூலமாகவும் அல்லது தாட்கோவின் 2.25 லட்சம் மானியத்துடன் வங்கி கடன் வழங்க வழிவகை செய்யப்படுகிறது. இதற்கு குறைந்தபட்சம் 10-ம் வகுப்பு முடித்த 18 முதல் 45 வயது உடைய ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் திருநங்கைகள் உள்ளிட்டோர் தாட்கோ இணையதளத்தின் மூலமாக விண்ணப்பித்துக் கொள்ளலாம். மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள சென்னையில் உள்ள தாட்கோ தலைமை அலுவலகத்தை தொடர்பு கொள்ளுமாறு அவர் கூறியுள்ளார்.